ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ., கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஹர்பஜனை துõண்டிய ஸ்ரீசாந்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 10வது லீக் போட்டியில் யுவராஜின் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கைகுலுக்க வர, ஆத்திரமடைந்த ஹர்பஜன், அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இது தொடர்பாக ஹர்பஜனுக்கு 11 ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தடை வதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் போர்டும்(பி.சி.சி.ஐ.,) இவர் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்தது. இதற்கான விசாரணைக்கு வக்கீல் சுதிர் நானாவதியை கமிஷனராக நியமித்தது. ஆமதாபாத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையில் ஹர்பஜன், ஸ்ரீசாந்த் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இவ்விசாரணையின் 14 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அறிக்கையை நேற்று முன்தினம் நானாவதி, பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரிடம் சமர்ப்பித்தார்.
நேற்று இந்த அறிக்கையை பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவார், உறுப்பினர்கள் சஷாங் மனோகர், சிராயு அமின் ஆகியோரை கொண்ட ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி முழுமையாக ஆராய்ந்தது. சகவீரரை தாக்குவது ஐ.சி.சி., விதிமுறை 3.2.1ன் கீழ் மிகப்பெரும் குற்றம். இதற்கு 5 ஒரு நாள் போட்டி அல்லது 3 டெஸ்டில் பங்கேற்க தடைவிதிக்கப்படும். இதன் அடிப்படையில் ஒழுங்கு முறை கமிட்டி, ஹர்பஜனுக்கு 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. மீண்டும் ஒரு முறை சர்ச்சையில் சிக்கினால் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வரும்பட்சத்தில் ஹர்பஜன் அடுத்த மாதம் 8ம் தேதி துவங்கும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாட முடியாது.
இது குறித்து சரத்பவார் கூறுகையில்,""ஹர்பஜனுக்கு 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளோம். இவர் மேலும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் வாழ்நாள் தடை விதிக்கப்படும். ஐ.சி.சி., விதி 3.2.1ன் படி இத்தடை விதித்துள்ளோம். அறிக்கையின் நகல் ஒன்று ஹர்பஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஹர்பஜனுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ""ஹர்பஜன் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இனி மேல் இது போன்ற தவறுகள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளார். இவ்விவகாரத்தில் இருந்து நல்ல பாடம் கற்றுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஸ்ரீசாந்தையும் எச்சரித் துள்ளது. அவரது நடவடிக்கையில் முன்னேற் றம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் எதிர்காலத்தில் அவருக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்படும்,'' என்றார்.
இரட்டை தண்டனை : ஹர்பஜனுக்கு 5 போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடை குறித்து அவரது பயிற்சியாளர் தவிந்தர் அரோரா கூறுகையில்,""ஸ்ரீசாந்தை அறைந்த விவகாரத்தில் 11 ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க ஹர்பஜனுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டு விட்டது. தற்போது இரண்டாவது முறையாக 5 ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது. பி.சி.சி.ஐ., அவரை எச்சரித்து விட்டிருக்கலாம். ஒரே தவறுக்கு இரண்டு தண்டனைகள் கொடுத்திருக்க வேண்டாம். ஹர்பஜன் மனவுறுதி மிக்கவர். இப்பிரச்னையில் இருந்து விரைவில் மீண்டுவிடுவார்,'' என்றார்.
தீர்ப்பு சரியே : இவ்விவகாரம் குறித்து ஹர்பஜனின் தாயார் அவ்தார் கவுர் கூறுகையில்,""பி.சி.சி.ஐ., முடிவு சரியானதாக தான் இருக்கும். தடை விதிக்கப்பட்டது தற்போது எனக்கு தெரியும். இது தொடர்பாக சொல்வதற்கும் ஒன்றும் இல்லை,'' என்றார்