போலக் பந்துவீச்சில் மிரட்ட ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 67 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இத்தொடரில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி என்ற வேதனையான சாதனையை படைத்தது. ஜெயசூர்யா 17 பந்தில் அரைசதம் கடக்க, மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வென்றது.
ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று மும்பையில் நடந்த 38வது லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கங்குலியின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
"டாஸ்' வென்ற சச்சின் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.மும்பை அணியில் குல்கர்னிக்கு பதிலாக ராஜேஷ் பவார் இடம்பிடித்தார். கோல்கட்டா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. தைபு மற்றும் இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக அகார்கர், ஹபீஸ் அணியில் இடம்பிடித்தனர்.திணறல் துவக்கம்: கோல்கட்டா அணிக்கு துவக்க வீரர்களாக சல்மான் பட், ஆகாஷ் சோப்ரா களமிறங்கினர். நெஹ்ரா வீசிய இரண்டாவது ஓவரில் சல்மான் ஒரு இமாலய சிக்சர் விளாசி அசத்தினார். ஆனால், போலக்கின் அடுத்த ஓவரில் சச்சினிடம் "கேட்ச்' கொடுத்து பெவிலியன் திரும்பினார். இவர் 13 ரன்கள் எடுத்தார். ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ஆகாஷ் சோப்ரா(1) பரிதாபமாக ரன்-அவுட்டானார்.
போலக் மந்திரம்: அடுத்து வந்த டேவிட் ஹசி, கேப்டன் கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். மிகவும் எதிர்பார்க்கப் பட்ட டேவிட் ஹசியால் போலக்கின் "மந்திர' பந்துவீச்சுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இவர் 2 ரன்கள் எடுத்தநிலையில் டகவாலேவிடம் "கேட்ச்' கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் இவர் முகமது ஹபீசையும்(5) வெளியேற்ற, கோல்கட்டா அணி 28 ரன்களுக்கு 4 விக் கெட்டை இழந்து திணற துவங்கியது.
கங்குலி ஏமாற்றம்: இவர்களை தொடர்ந்து சாகா (1), சுக்லா (0) அடுத்தடுத்து அவுட்டாயினர். வரிசையாக விக்கெட் விழுந்ததால் கோல்கட்டா அணியின் ரன்வேகம் மிகவும் மந்தமாகி போனது. இந்த அணி 11.5வது ஓவரில் தான் 50 ரன்களை எட்டியது. இதன்மூலம் இத்தொடரில் 50 ரன்களை சேர்க்க அதிக பந்துகளை வீணடித்த அணி என்ற சாதனையை படைத்தது. கங்குலி 15 ரன்களுக்கு அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் 15.2 ஓவரில் 67 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இத்தொடரில் குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட்டான அணி என்ற வேதனையான சாதனையை தன்வசம் சேர்த்து கொண்டது.
துல்லியமாக பந்துவீசிய போலக் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.ஜெயசூர்யா விளாசல்: எளிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் "டக்' அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த உத்தப்பா, ஜெயசூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். இஷாந்த் வீசிய இரண்டாவது ஓவரில் இந்த ஜோடி மூன்று பவுண்டரிகள் அடித்து மிரட்டியது. கோல்கட்டா பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெயசூர்யா, அக்தர் வீசிய மூன்றாவது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 23 ரன்கள் எடுத்தார். உத்தப்பா 10 ரன்களுக்கு அவுட்டானார்.
தொடர்ந்து விளாசிய ஜெயசூர்யா இஷாந்த் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து, ஐ.பி.எல்., தொடரின் அதிவேக அரைசதம் கடந்து அசத்தினார். இவர் 17 பந்தில் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 5.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்து, இத்தொடரில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது.