அரசியல் துறைக்கும், சினிமா துறைக்கும் ஒருங்கே முக்கியத்துவம் கொடுத்துவரும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த், இவ்விரு துறைகளின் செயல்பாட்டிலும் எம்.ஜி.ஆரையே முன்னுதாரணமாகக் கொண்டுள்ளார்.
எப்படியாவது எம்.ஜி.ஆராகிவிட வேண்டும் என்று அவர் துடிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், 'கறுப்பு எம்.ஜி.ஆர்.', 'வாழும் எம்.ஜி.ஆர்.' என்று வர்ணித்து தொண்டர்களும் ஆங்காங்கே விளம்பரத் தட்டிகளை வைத்தவண்ணம் உள்ளனர்.
இதற்கெல்லாம் உச்சமாக, தனது படத்தின் பெயரையும் 'எம்.ஜி.ஆர்.' என்று பெயரிடுவதற்கு விஜயகாந்த் முடிவு செய்தார். 'இது கொஞ்சம் அதிகம்' என்று உணர்ந்த அவர், பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளார்.
'அரசாங்கம்' படத்துக்குப் பிறகு தங்கராஜ் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார் விஜயகாந்த். இந்தப் படத்துக்காக 10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி, கொள்கை, எதிரிகளுக்கு சவால் என அனைத்து ரக சலம்பல்களும் இப்படத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை', ஊருக்கு உழைப்பவன்' என்று எம்.ஜி.ஆர் படங்கள் பலவற்றின் தலைப்புகள் பரீசிலிக்கப்பட்ட நிலையில், 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற தலைப்பே விஜகாந்துக்குப் பிடித்துள்ளது.
ஆனால், இந்தத் தலைப்பில் செல்வராகவன் ஒரு படம் இயக்குவதால், 'கோடியில் ஒருவன்' என பெயரிடலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த், 'கோடியில் ஒருவன்'தான்' ; ஆனால், தயாரிப்பாளர்தான் தெருக்கோடியில் தள்ளப்படாமல் இருக்க வேண்டும்!