'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்.
தாதா கதை என்றதுமே வழக்கமான அடிதடி, மசாலா என்று இல்லாமல் நட்பு, சோகம் என கலந்து வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
குடி, அடிதடி என்று சர்வ சாதாரணமாக அலையும் நரேனும், எஸ்ஐ கனவு, ஜிம் என்று லட்சியத்தோடு அலையும் அஜ்மலும் நண்பர்கள்.
நண்பனை கடுப்பேற்றுவதற்காக போலீஸ் தேர்வுக்கு செல்லும் நரேனுக்கு வேலை கிடைக்கிறது. அதே தேர்வில் அஜ்மல் நிராகரிக்கப்படுகிறார்.
சூழ்நிலை மாறுகிறது, போலீஸ் அதிகாரியாகி நேர்மையாக வாழ நினைத்த அஜ்மல் தாதாக்கூட்டத்தின் அடியாளாகிறார். கலாட்டா பேர்வழியான நரேன் போலீஸ் ஆகிறார்.
பாதை தவறும் அஜ்மல் ஒரு கொடூர தாதா கும்பலிடம் சேர்ந்து பெண் கடத்தலுக்கு துணைப்போக, அதிலிருந்து நண்பனை மீட்க போராடும் நரேன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் த்ரில் ஸ்டோரி.
முதன் முறையாக போலீஸ் வேலைக்குச் செல்லும் இளைஞன் எதிர் கொள்ளும் அவமானங்கள், தடுமாற்றங்கள் அனைத்தையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் நரேன்.
இந்த படத்தின் மூலம் ஒட்டமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் பிரசன்னா. குர்தா, நீண்ட தலைமுடி, மணிகட்டை முகத்துக்கு நேராக உயர்த்தி அடிக்கடி மணி பார்க்கும் ஸ்டைல் என மேனரிசத்தில் மிளிர்கிறார்.
போலீஸ் கனவில் மிதக்கும்போதும், தாடி மீசையுடன் ரவுடியாக மாறும்போதும் அஜ்மல் நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார். காமெடியிலிருந்து விலகி வில்லத்தனம் காட்டுகிறார் பாண்டியராஜன். அதிலும் பளிச் முத்திரை பதிக்கிறார்.
அஜ்மலின் தங்கையாக வரும் விஜயலட்சுமி, எம்.எஸ்.பாஸ்கரன், பொன் வண்ணன், லிவிங்ஸ்டன் என மற்றவர்களும் யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார்கள்.
குற்றவாளிகளின் குற்றத்தை மட்டும் காட்டாமல், அவர்களின் குற்றப்பின்னணி மற்றும் திரைமறைவு நடவடிக்கைகள் ஆகியவற்றையும் காட்ட முயன்றிருக்கிறார் மிஷ்கின்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். கிளைமாக்ஸ் காட்சிகளில் கேமராவின் பங்கு அதிகம்.
பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார் சுந்தர் சி.பாபு.
மிஷ்கினின் மீண்டுமொரு வெற்றிப்படைப்பு 'அஞ்சாதே'