ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் கை கோர்க்கிறார் விஜய்.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடித்துக் கொண்டிருந்த விஜய்யைக் கூப்பிட்டு பூவே உனக்காக படத்தில் சீரியஸான கேரக்டரில் நடிக்க வைத்து பெரிய பிரேக் கொடுத்தவர் ஆர்.பி.செளத்ரி. அந்தப் படத்திற்குப் பிறகுதான் விஜய்க்கு ஸ்டார் வேல்யூவே ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஆர்.பி.செளத்ரியின் நிறுவனத்துடன் இணைகிறார் விஜய். இப்படத்துக்கு ஆண்டவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.வி.சசியின் முன்னாள் உதவியாளரான ராமகிருஷ்ணன் இயக்கவுள்ளார்.
இதற்கிடையே, தற்போது குருவியில் பிசியாக உள்ளார் விஜய். படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரே ஒரு வாரம்தான் தேவைப்படுகிறதாம். மார்ச் 7ம் தேதி படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிகிறது.
குருவி நின்றாக வந்திருப்பதாக விஜய் தரப்பு கூறுகிறது. விஜய்க்கும் அதில் பரம சந்தோஷமாம். படம் குறித்த விவரங்களை விஜய் தரப்பு படு கமுக்கமாக வைத்திருக்கிறது.
மே தினத்தன்று குருவி தியேட்டர்களுக்கு வருகிறதாம். படத்தின் ஆடியோவை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.