தமிழ் சினிமாவில் தொடர்ந்து 3 ஆண்டுகளைக் கடந்து ஓடி சாதனை படத்த ரஜினிகாந்தின் 'சந்திரமுகி', இந்தியிலும் சத்தமின்றி சாதனை படைத்துள்ளது.
மலையாளத்தின் 'மணிச்சித்திரதாழ்' படத்தை கன்னடத்துக்கு ரீ மேக் செய்த இயக்குனர் பி.வாசு, அதையே தமிழில் 'சந்திரமுகி'யாக்கினார்.
இப்படம் தமிழ் சினிமாவில் வசூலில் சாதனை படைத்த நிலையில், இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தி 'சந்திரமுகி'க்கென மொத்தம் 150 பிரின்டுகள் போடப்பட்டன. ஒரு டப்பிங் படத்துக்கு, இந்தியில் இத்தனைப் பிரின்டுகள் போடப்பட்டது இதுவே முதன்முறை!
இப்படத்தின் வசூலும் அமோகமாக உள்ளதாகவும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும், 'சந்திரமுகி'யை இந்தியில் வெளியிட்டிருக்கும் திலீப் அத்வானி வியப்புடன் தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு மிகப் பெரிய விசேஷமும் அடங்கியிருக்கிறது. மலையாள 'மணிச்சித்திரதாழ்', பிரியதர்ஷனால் 'பூல் புலையா' என்ற பெயரில் கடந்த ஆண்டு ரீ மேக் செய்து வெளியிடப்பட்டது. அக் ஷய் குமார் நடித்த அப்படம், நல்ல வரவேற்பையே பெற்றது.
இந்த நிலையிலும், ரஜினியின் 'சந்திரமுகி'க்கு இந்தி ரசிகர்களிடையே மிகுதியான வரவேற்பு கிடைத்துள்ளதே பிரம்மிப்புக்குக் காரணம்!