கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போகும்போதே, திரும்பி வருவதற்கும் ரிட்டர்ன் டிக்கெட் போடும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். சிம்ரன், நதியா வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் யுவராணி. இப்படி டச் விட்டு மீண்டும் டச் ஏற்படுத்திக் கொள்கிற நடிகைகள் மத்தியில், சினிமாவையும், திருமணத்தையும் சேர்ந்தே அனுபவிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள், மாளவிகா மாதிரி! இப்போது அந்த லிஸ்டில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் மீராஜாஸ்மின். மாண்டலின் இசையில் மூழ்கி கிடக்கும் இவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பதற்கு கணவரிடம் அனுமதி வாங்கிவிட்டாராம். தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய நினைத்த இயக்குனர்கள் மீராவின் கல்யாண செய்தி வெளியானவுடன் அப்படங்களில் இருந்து கழற்றிவிட்டனர். இந்த பாதிப்பை சரி செய்ய, திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்ற தகவலை கசிய விட்டிருக்கிறார் மீரா. இந்த யுக்திக்கு நல்ல பலன். தற்போது பார்த்திபனுடன் ஒரு படத்தில் ஜோடி சேர அழைத்திருக்கிறார்களாம். இப்படத்தை தயாரிப்பவர் அந்த கால ஹீரோ ரவிச்சந்திரன். தொடர்ந்து இதுபோன்ற அழைப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம்.