பிரபல நடிகர் ஜாக்கி சான் தனது தந்தையின் உடலை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தார்.
தந்தை மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின்93 வயது தந்தை சார்லி சான், புராஸ்டேட் புற்று நோய் காரணமாக கடந்த மாதம் 26-ந்தேதி ஹாங்காங் நகரில் மரணமடைந்தார்.
அவரது உடலை இரண்டு வாரங்களுக்குப் பின் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவுக்கு கொண்டு சென்று ஜாக்கி சான் நேற்று அடக்கம் செய்தார். அங்குள்ள புறநகர் பகுதியில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் சார்லி சானின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கின்போது அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பெருமளவில் வந்திருந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தந்தையின் உடலை ஜாக்கிசான் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தது ஏன் என்பது பற்றி உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வாழ வைத்த ஆஸ்திரேலியா
ஹாங்காங்கில் பிறந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தனது சிறுவயதில் பெற்றோருடன் சில காலம் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெர்ராவில் வசித்தார்.
தந்தை சார்லி சான், கான்பெர்ராவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இயங்கி வந்த உணவகத்தின் தலைமை சமையற்கலைஞராக 40 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவர் ஆவார். இதனால் பெற்றோருடன் சிறிது காலம் ஜாக்கி சான் அங்கு வசித்தார்.
எனினும் தன்னுடன் மனைவியையும் மகனையும் வைத்துக் கொள்ளாமல் அவர்களை ஹாங்காங்கிற்கு சார்லி சான் திருப்பி அனுப்பி விட்டார். மேலும் ஜாக்கிசானை, ஹாங்காங் நகரில் உள்ள சீன நாடக கம்பெனி ஒன்றில் நடிப்பு பயில சேர்த்து விட்டார்.
அதே இடத்தில்
பின்னாளில் ஹாலிவுட் நடிகராகி புகழ்பெற்ற பின்பும் தந்தையையும், தனது குடும்பத்தையும் வாழவைத்த ஆஸ்திரேலியாவை ஜாக்கி சான் மறக்கவில்லை. இதனால்தான் தாயார் லீ லீ சான் 2002-ம் ஆண்டு இறந்தபோது அவரை கான்பெர்ராவில் அடக்கம் செய்தார்.
தற்போது தந்தை சார்லியையும் தாயாரை அடக்கம் செய்த அதே இடத்திற்கு அருகிலேயே புதைத்து இருக்கிறார்.
தந்தையின் மரணம் குறித்து ஜாக்கி சான் கூறுகையில், `எங்களது குடும்பம் மிகவும் வறுமையாக இருந்த காலத்தில் எங்களை வாழவைக்கவேண்டும் என்பதற்காக தந்தை குடும்பத்தை துறந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்து விட்டார். அவரது கடின உழைப்பால்தான் நாங்கள் உயிர் வாழ்ந்தோம். அவர் மிகவும் மரியாதைக்குரிய தந்தை ஆவார். அவரது இழப்பு எனக்கு மிகப்பெரிய துயரம். அதனால்தான் எங்களை வாழ வைத்த ஆஸ்திரேலிய மண்ணில் அவரைப் புதைத்தேன்' என்று உருக்கமாக கூறினார்.
மருத்துவ ஆராய்ச்சி மையம்
தாயார் லீ லீ சான் மறைவிற்கு பின் ஆஸ்திரேலியாவின் புற்று நோய் ஆராய்ச்சிக்கு 60 லட்ச ரூபாய் வழங்கிய ஜாக்கி சான், விரைவில் `தனது பெற்றோர் பெயரில் மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை கான்பெர்ராவில் தொடங்கப்போவதாகவும்' கூறியிருக்கிறார்.