கே.எம். இசை காப்பகம்' என்ற பெயரில் புதிய இசைப்பள்ளியை தொடங்கும் ஏ.ஆர்.ரகுமான் அடுத்த ஆண்டில் இதை 3 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்துகிறார்.
இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் இன்று அளித்த பேட்டி: இசைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களை தொழில்முறையில் ஈடுபட வைக்கும் நோக்கில் இந்த பயிற்சி தொடங்கப்படுகிறது. இங்கு இசை, தொழில்நுட்பம், குரல், தந்திக்கருவிகள் பியானோ மற்றும் எலக்ட்ரானிக் கீ போர்டு ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, மேலும் பல இசைக்கருவிகளை இயக்க பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் தொடக்க பயிற்சி மற்றும் அடித்தள பயிற்சி மற்றும் பட்டயப்பயிற்சி என பல வகைகள் உள்ளன. இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிநவீன ஸ்டுடியோ கருவிகளை கையாளும் திறமைகளை பெறுவர்.
அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ள இந்த இசைப்பள்ளியில் சர்வதேச தரத்தில் பயிற்சிகள் அளிக்கப்படும். முதலில் கோடம்பாக்கத்தில் செயல்படும் இந்த பள்ளி, அடுத்த ஆண்டு சென்னை புறநகங்களில் 3 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமையவுள்ளது.
இதில், பயிற்சி வகுப்பு கட்டிடங்கள், இசை அரங்கு, ஒலிபரப்பு அரங்கம், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான இருப்பிட வளாகங்கள் ஆகியவை அமைக்கப்படும். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.