பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுதானே ஆகவேண்டும்? வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு போகும்போது கூடவே சினிமாவுக்கு தொடர்பில்லாத ஆட்களையும் அழைத்துச் சென்று அந்த நாட்டில் விட்டு விட்டு வருவதை ரகசியமாக செய்து வருகிறார்களாம் கோலிவுட்டில். இதற்காக கணிசமாக ஒரு தொகையை பெற்றுக் கொள்வார்களாம் மேற்படி படத்தயாரிப்பாளர்கள்.
இந்த குறுக்குவழி பற்றி அரசல் புரசலாக தெரிந்திருந்தாலும், தில்லுமுல்லு செய்யாத தயாரிப்பாளர்களும் தங்கள் விசாரணை வளையத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் சற்று இடைவெளி விட்டு கண்காணித்து வருகிறார்கள் தூதரக அதிகாரிகள். இப்படி கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கிற நேரத்தில்தான் சிக்கிக் கொண்டார் நடிகை ஃபுளோரா. குஸ்தி, கஜேந்திரா, ஸாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு போன்ற படங்களில் நடித்தவர் இவர். அமெரிக்காவில் உள்ள தெலுங்கு பிலிம் இன்ஸ்ட்டியூட்டை பார்க்க போவதாகவும், தன்னுடன் தனது மேக்கப் வுமன் ஸ்ரீலதா என்பவருக்கும் சேர்த்து விசா வழங்க வேண்டும் என்று மனு செய்திருந்தார். தனக்கு ஸ்ரீலதா மேக்கப் போடுவது போலவும் சில புகைப்படங்களை அந்த விண்ணப்பத்தில் இணைத்திருந்தார்.
ஸ்ரீலதாவிடம் தூதரக அதிகாரிகள் விசாரித்தபோது, நடந்ததை அப்படியே ஒப்பித்துவிட்டாராம். கனடாவில் வேலை வாங்கி தர வேண்டும் என்று புரோக்கர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்தாராம் லதா. நடிகைக்கு மேக்கப் போடுபவர் என்றால், விசா எளிதாக கிடைத்துவிடும் என்று ஐடியா கூறிய புரோக்கர், தனது செல்வாக்கில் ஃபுளோராவையும் இதில் சேர்த்திருக்கிறார். அமெரிக்காவில் இறங்கிக் கொள்ளும் ஸ்ரீலதா அங்கிருந்து கனடாவுக்கு பஸ்சில் போய்விடுவதாகவும், ஊரை சுற்றி பார்த்துவிட்டு ஃபுளோரா மட்டும் சென்னை திரும்பிவிடுவதாக திட்டம்.
குட்டு வெளிப்பட்டு விட்டதால், இருவரையும் கைது செய்து 15 நாள் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். இந்த செய்தி வெளிவந்தபின் திரையுலகை சேர்ந்த முன்னணி தில்லுமுல்லர்கள் கவலையில் இருக்கிறார்களாம். திரையுலகத்தினரின் உதவியோடு தொழில் செய்து வந்த டிராவல் அதிபர்களும் கவலையுற்று இருக்கிறார்கள்.
அடிக்கடி வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த ஒரு இசையமைப்பாளர் இந்த வேலையை செய்து வந்தாராம். அதிகாரிகளின் பார்வை தன் மேல் திரும்பியிருப்பதை தெரிந்து கொண்ட அவர், இப்போதெல்லாம் வெளிநாட்டு இசை நிகழ்ச்சியை ஒப்புக் கொள்வதில்லையாம். ஒரு பெரிய இயக்குனர் கூட வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு போகும்போது தங்கள் குழுவில் இதுபோன்ற சிலரை பலமுறை அழைத்து சென்றதாக கதைக்கிறார்கள்.
இனிமேல் விழித்துக் கொள்வார்கள்!