கன மழை மற்றும் வெள்ளத்தால், மம்முட்டியின் பழசி ராஜா படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான செட் அடித்துக் கொண்டு போய் விட்டதாம்.
மம்முட்டியும், சரத்குமாரும் பத்மப்ரியா மற்றும் கனிகாவுடன் இணைந்து மிரட்டும் படம்தான் பழசிராஜா.
இப்படத்தின் ஷூட்டிங் கண்ணூரில் கடந்த சில வாரங்களாக நடந்து கொண்டிருக்கிறது. படத்திற்காக ரூ. 50 லட்சம் செலவில் பெரிய அரண்மனை செட் போடப்பட்டிருந்தது.
சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தில் அரண்மனையின் ஒரு பகுதி அடித்துக் கொண்டு போய் விட்டதாம். இதனால் படப்பிடிப்பை தொடருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலவரையின்றி படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் மம்முட்டி பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார். காரணம், இப்படம் ஏற்கனவே 6 மாதமாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த கிறிஸ்துமஸுக்கே இப்படம் திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை.
பழசி ராஜா மட்டுமல்லாது கலாபவன் மணியின் ஸ்வர்ணம் படப்பிடிப்பும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காத அதிரபள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் ரூ. 7 லட்சம் செலவில் செட் போட்டிருந்தனர். இந்த செட் மழை நீரில் காலியாகி விட்டது.
இதேபோல மலையாள நடிகர் சங்கமான அம்மா தயாரிக்கும் டுவென்டி 20 படத்தின் ஷூட்டிங்கும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாம்.
தமிழுக்கும் கன மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக விக்ரமின் கந்தசாமி படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
செட்டுக்குள் மழையைக் கொண்டு வந்து படம் எடுப்பது சினிமாக்காரர்களின் வழக்கம். ஆனால் மழையால் செட்டெல்லாம் நாசமாகியிருப்பது வேதனைதான்.