'ஆணழகன்' சரத்குமாருடன் முதல் முறையாக இணைகிறார் 'புன்னகை இளவரசி' ஸ்னேகா.
ஸ்னேகா நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகி விட்டதாம். இதுவரை
வாய்ப்புக்குப் பஞ்சமில்லாமல், நடிப்புக்கு வஞ்சனையில்லாமல் தமிழ் திரை ரசிகர்களை ஓய்வின்றி வசீகரித்து வருகிறார் ஸ்னேகா.
தற்போது ஸ்னேகா கையில் 4 தமிழ்ப் படங்கள் உள்ளன. ஒன்றில் ராகவ லாரன்ஸுடன் பாண்டி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். ரஜினியின் குசேலன் படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.
இந்த நிலையில் சரத்குமாரை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள ஜக்குபாய் படத்திலும் நடிக்கவுள்ளார் ஸ்னேகா. சரத்குமாருடன் அவர் இணைவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து ஸ்னேகா கூறுகையில், சில நாட்களுக்கு முன்புதான் கே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கையெழுத்திட்டேன். சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இரு ஜாம்பவான்களுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தற்போது அச்சமுண்டு அச்சமுண்டு, சிலம்பாட்டம் ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளேன் என்றார் ஸ்னேகா.
தமிழ் தவிர இரண்டு தெலுங்குப் படங்களும் ஸ்னேகா கையில் உள்ளதாம்.