``முதல் இரவு காட்சியில் நடித்தபோது, என் இடுப்பை கிள்ளினார்'' என்று நடிகை மோனிகாவினால் புகார் செய்யப்பட்டவர், நடிகர் முன்னா. `சிலந்தி' என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
கதைப்படி, இரண்டு பேரும் புதிதாக திருமணம் ஆன ஜோடி. முதல் இரவில் மோக வெறியுடன் கட்டித்தழுவுவது போன்ற காட்சியை, புதுச்சேரியில் படமாக்கினார்கள். அப்போது முன்னா தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக மோனிகா குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு பற்றி முன்னாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
``நான், சினிமாவுக்கு புதியவன் அல்ல. இதற்கு முன்பு பல்லவன், ஜனனம், உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ஆகிய படங்களில் நடித்து இருக்கிறேன். அந்த படங்களில் நடிக்கும்போது, என்னைப்பற்றி ஒரு சின்ன புகார் கூட வந்ததில்லை.
மோனிகாவும், நானும் ஏற்கனவே ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். அந்த முதல் இரவு காட்சியில் நடித்தபோது, மோனிகா `செக்சி'யாக புடவை கட்டி இருந்தார். அது, அவருக்கு அசவுகரியமாக இருப்பதாக உணர்ந்தார். ஒவ்வொரு `ஷாட்' எடுக்கும்போதும், ``மோனிகா, உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே....?'' என்று அக்கறையுடன் விசாரித்தேன். ``எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை'' என்று மோனிகா சொன்னபிறகே, ஒவ்வொரு ஷாட்டிலும் நடித்தேன்.
நான் அவரிடம், சில்மிஷம் செய்யவில்லை. தவறாக நடந்துகொள்ளவில்லை. படப்பிடிப்பு நடக்கும்போது, எங்களை சுற்றி 50 பேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையில், எந்த ஒரு நடிகரும், உடன் நடிக்கும் நடிகையிடம் அநாகரீகமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.
நான் தவறாக நடந்தேன் என்று மோனிகா என் முன்னால் வந்து சொல்ல தயாரா? அநியாயமாக என் மீது பழி போடுகிறார்கள். இனிமேல் மோனிகாவுடன் நடிப்பதற்கு எல்லா கதாநாயகர்களும் பயப்படுவார்கள். எனக்கு நடந்தது, இன்னொரு கதாநாயகனுக்கு நடக்கக் கூடாது.
நான் வெளியில் சென்றால், ``இடுப்பை கிள்ளியவர்,'' ``சில்மிஷ நாயகன்'' என்று கேலி செய்கிறார்கள். உண்மையில் சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது, நான்தான். அந்த படத்தில் நடிப்பதற்கு நான் வாங்கிய சம்பளம், வெறும் ஆயிரம் ரூபாய்தான். நான் அணிந்து நடித்த உடைகள் அத்தனையும் என் சொந்த உடைகள்தான். படத்துக்காக, இவ்வளவு தியாகங்கள் செய்த என் மீது அநியாயமான புகார்களை அள்ளி வீசுகிறார்கள்.''
இவ்வாறு முன்னா கூறினார்.