அசப்பில் விஷ்ணுவர்த்தன் போலவே இருக்கிறார் அவரது தம்பி கிருஷ்ணாவும். படத்தின் பெயர் அலிபாபா. விஷ்ணுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நீலன் கே.சேகர் இப்படத்தை இயக்குகிறார். படத்தை தயாரிப்பவர் கிருஷ்ணாவின் அப்பா பட்டியல் சேகர்.
அமெரிக்காவில் படித்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் கிருஷ்ணாவுக்கு நடிப்பு புதிதல்ல. மணிரத்தினத்தின் அஞ்சலியில் குழந்தை நட்சத்திரம். சந்தோஷ்சிவனின் டெரரிஸ்ட் படத்தில் ஹீரோ. இப்படி அனுபவங்களை குவித்திருந்தாலும், கமர்ஷியல் படத்தில் ஹீரோவாக நடிக்கும்போது ஒரு அச்சம் இருக்கும்தானே?
“அதுதான் இல்லை” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார். டூப்பே இல்லாமல் அவர் சண்டை போடுகிற வேகம், முன்னணி ஹீரோக்களிடம் கூட பெரும்பாலான நேரங்களில் இருக்காது. கிருஷ்ணா அவ்வளவு ஃபார்ஸ்ட் என்கிறார் இவர். இரண்டு கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே விழுகிற காட்சிகளை டூப் இல்லாமலே எடுத்ததாக சொல்லும் தினேஷ், இப்படி ஒரு துடிப்புள்ள ஹீரோவை நீங்கள் பார்த்து வியக்கதான் போகிறீர்கள் என்கிறார் சவால் தொணியில்!
பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமை, இன்னும் இது போன்ற சமூகத்தை அச்சுறுத்தும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார்களாம். அலிபாபாவை ஜுன் மாதம் வெளியிடும் திட்டத்திலிருக்கிறார்கள். பெரிய படங்கள் வந்தாலும் கதை மேல் இருக்கிற நம்பிக்கைதான் எங்களை இந்த முடிவுக்கு தள்ளியது என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் பட்டியல் சேகர்.
நிறைய அதிசயத்தை நிகழ்த்துவர்தானே அலிபாபா!