தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், நடிகை மல்லிகா ஷெராவத் அரைகுறை ஆடையுடன் வந்து மக்கள் மனதை புண்ணாக்கிவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலர் ஒருவர் அளித்திருந்த புகாரில், ௦கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடந்த 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில், தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் நடிகை மல்லிகா ஷெராவத் அரைகுறை ஆடையணிந்து வந்திருந்தாகவும், இதனால் தமிழ் பண்பாளர்கள் பலர் முகம் சுளித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் எதிரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், ஆபாசமாக அறுவருக்கத்தக்க சேஷ்டைகளையும் மல்லிகா ஷெராவத் செய்ததாகவும், இதை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பார்த்து தமிழ் கலாச்சாரத்தில் பற்று உள்ளவர்கள் மன வேதனையையும் அவமானத்தையும் அடைந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மல்லிகா ஷெராவத் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.