மலைக்கோட்டை படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விஷால் ரசிகர்களின் ஆளுயர மாலை மரியாதைகளுடன், விசில் சப்தங்களும் காதை பிளக்க, கலைக்கோட்டையில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தது மலைக்கோட்டை.
ஈகோ பார்க்காமல் வந்திருந்தார்கள் ஜெயம் ரவி, ஜீவா ஆகிய ஹீரோக்கள். அதிலும், ஜெயம் ரவியின் பேச்சில் கொஞ்சம் கூட செயற்கையில்லை. ஒரு கதாநாயகனுக்கு வெற்றி விழா எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். எங்க அப்பா எனக்கு ஒரு விழா கூட நடத்தவில்லை என்று அவர் கூற மேடையில் அமர்ந்திருந்த ஜெயம் ரவியின் அப்பா, எடிட்டர் மோகன் விழுந்து விழுந்து சிரித்தார். இன்று உள்ள நிலையில் ஹீரோ ஆவது கஷ்டம். அதிலும் குறுகிய காலத்தில் ஹீரோ ஆவது கஷ்டம். அதிலும் ஆக்ஷன் ஹீரோ ஆவது அதைவிட கஷ்டம். விஷால் குறுகிய காலத்தில் ஆக்ஷன் ஹீரோ ஆகிவிட்டார் என்றார்.
“நான் ஒரு ஸ்வீட் கடைக்கு சென்றேன். இங்கு என்னென்ன ஸ்வீட் இருக்கு என்று அவர்களிடம் கேட்டேன். இங்கு இல்லாத ஸ்வீட்டே இல்லை என்றார்கள். அவர்களிடம் ப்ரியாமணி இருக்கா என்று கேட்டேன்” இப்படி போட்டு வாங்கினார் பார்த்திபன். முகத்தில் வெட்கம் குவிய ஆனந்தப்பட்டார் ப்ரியாமணி.
கலகலப்பாக நடந்த விழாவில் ஏ.வி.எம் சரவணனே தனது வழக்கத்தை மீறி ஜோக் அடித்தது ஆச்சர்யம். மனோபாலாவை பற்றி கூறிய அவர், “டி.வி யை நிறுத்திட்டாலும் அதிலே மனோபாலா தெரிகிறார் என்று சொல்கிற அளவுக்கு அவர் எல்லா படத்திலும் நடிக்கிறார்” என்று குறிப்பிட கைதட்டி மகிழ்ந்தது அரங்கம்.
இறுதியாக பேசிய விஷால், நான் ப்ரியாமணியை காதலிக்கிறதாகவும், நயன்தாராவை காதலிக்கிறதாகவும் எழுதறாங்க. நான் காதலிக்கிறேன். ஆனால் இவங்க இரண்டு பேரையும் அல்ல என்று கூறி வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.