லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார் என்று செல்வமணியை பாராட்டினார் ராதிகா. புலன்விசாரணை-2 படத்தின் பாடல்களை பார்த்துவிட்டுதான் இந்த பாராட்டு. ஒளிபரப்பப் பட்ட இரண்டு பாடல்களிலும் ஏ-க்கச்சக்க கவர்ச்சி.
பாலசந்தர், பாரதிராஜா போன்ற மூத்த இயக்குனர்கள் வாழ்த்த வந்திருந்தார்கள். நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் வந்திருந்தார். பழைய புலன்விசாரணை படத்தில் வில்லனாக நடித்தவர் இவர். அரசியலில் எதிர் எதிர் திசையில் இருந்தாலும், புலன் விசாரணை பற்றி பேசியவர் விஜயகாந்த் பெயரையும் உச்சரித்து நன்றி தெரிவித்தது நாகரிகத்தின் உச்சம்.
விழாவில் பேசிய அனைவரும் “செல்வமணி பிரச்சனையை தேடி போக கூடியவர்” என்ற தொணியிலேயே பேசினார்கள். அவர்கள் சொன்னது போலவே இந்த படத்திலும் பிரச்சனைக்குரிய ஒரு விஷயத்தை வைத்திருக்கிறாராம் அவர். சென்சாரில் இப்படத்திற்கு சான்றிதழ் மறுக்கப்பட்டு மேல் முறையீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்கிறார் செல்வமணி. இவரது பொதுநல ஆர்வத்தை வெகுவாகவே பாராட்டினார் இயக்குனர் பாலசந்தர்.
செல்வமணி வனவாசம் போய்விட்டு வந்ததாக சொன்னார்கள். உண்மையில் அவரை படைப்பாளிகள் பிரச்சனையில் உள்ளே இழுத்து திசை மாறி போக வைத்தது நான்தான். இல்லையென்றால் செல்வமணிக்கு இத்தனை வருட கேப் இருந்திருக்காது என்று வெளிப்படையாக பேசிய பாரதிராஜா, வயது எத்தனை ஆனாலும் இந்த தொழிலுக்கு மனசு இளமையாக இருக்க வேண்டும். நாங்கள் இன்னும் இளமையாக இருக்கிறோம் என்றார்.
நான் நிறைய பேசணும்னு வந்தேன். கரண்ட் கட் ஆயிடுச்சு. நேரம் இல்லாததால் மற்றவர்கள் பேசட்டும். நான் வெற்றி விழாவில் பேசுகிறேன் என்றார் செல்வமணி நம்பிக்கையோடு. அவரது நம்பிக்கை நிறைவேறட்டும்!