சினிமா பிரஸ் கிளப் சார்பாக இயக்குனர் அமீருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. விழாவில் பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, இயக்குனர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, சேரன், சீமான், லிங்குசாமி, சுப்பிரமணிய சிவா, எடிட்டர் மோகன், ராதாரவி ஆகியோர் கலந்து கொண்டு அமீரை வாழ்த்தினார்கள். முன்னதாக பெர்லின் விருது பற்றிய விளக்கவுரை அளித்தார் பத்திரிகையாளர் அமலன்.
பாரதிராஜா பேசும்போது, நானே பதிவு செய்யாத என் கிராமத்தை மதுரையில் வாழ்ந்த, அதிலும் டவுனில் வாழ்ந்த அமீர் பதிவு செய்தது எனக்கு வியப்பை அளித்தது. என் குடும்பத்தோடு பருத்தி வீரன் படத்தை பார்க்க போயிருந்தேன். வெளியே வந்து வெகு நேரமாகியும் நானும் என் மனைவியும் இந்த படத்தை பற்றி எதுவுமே பேச முடியாமல் வீட்டுக்கு வந்தோம். சிறிது நேரம் கழித்து என் மனைவி என்னிடம், “இத்தனை வருடம் சினிமாவில் நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?” என்று கேட்டார். இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தை எடுத்த அமீருக்கு பத்திரிகையாளர்களே சேர்ந்து விருது கொடுக்கிறார்கள் என்றால், இது பெர்லின் விருதை விட பெரியது. அமீருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.
வழக்கமாக இரண்டே வரிகளில் பேசிவிட்டு அமர்ந்துவிடும் அமீர், இன்று நான் நிறைய பேசப் போகிறேன் என்று கூறிவிட்டு மைக் பிடித்தார். ஆதங்கம், கோபம், வேதனை, மகிழ்ச்சி, என்று அத்தனை உணர்ச்சிகளையும் அள்ளிக் கொட்டினார். மனம் திறந்து அவர் பேசிய வார்த்தைகள் அமீர் என்ற கலைஞனின் பிடிவாதத்தையும், அவருக்கு சினிமா மேல் இருக்கும் காதலையும் வெளிப்படுத்தியது. பாலாவுக்கும் அமீருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை ஒரு திரைக்கதைபோல் அவர் விவரித்த விதம் பருத்திவீரன் படம் போலவே சுவாரஸ்யம். எனக்கும் பாலாவுக்கும் ஏதோ பெரிய பிரச்சனை என்று நினைக்கிறார்கள். உண்மையில் பாலாவை நான் ஏன் பிரிந்தேன் என்பதை இப்போது சொல்கிறேன்.
நானும் அவனும் ஒன்றாகவே திரிந்தவர்கள். சென்னை வந்து அவன் டைரக்டர் ஆகிவிட்டான். நான் அவனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்தேன். எல்லாரும் சார் என்று அழைக்கும்போது நான் மட்டும் பாலா என்று அழைப்பேன். சேது வெற்றிக்கு பிறகு அவனை சுற்றி ஒரு கூட்டம் கூடியது. அவர்கள் என்னிடம் பாலாவை “பாலா சார்” என்றுதான் அழைக்க வேண்டும் என்றார்கள். அப்படியெல்லாம் என்னால் அழைக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டேன். அதன்பின் நானும் பேசவில்லை. அவனும் கூப்பிடவில்லை. பருத்தி வீரன் படம் வெளிவந்ததும் ஒரு நாள் பாலாவிடமிருந்து போன். எங்கேயிருக்கே? என்றான். நான் அலுவலகத்தில் இருப்பதாக சொன்னேன். உடனே வா என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான். நான் போனேன். முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் வா என்றான். சிறிது நேரம் கழித்து, “படம் பார்த்தேன். நானே 15 இடத்தில் அழுதுட்டேன்” என்றான், எந்த இடத்தில்? என்றேன். அதெல்லாம் உங்கிட்ட சொல்லணுமா? என்றவன், ஒரு வியூ ஃபைன்டரை எடுத்து என் கழுத்தில் மாட்டினான். இது பாலுமகேந்திரா அவனுக்கு பரிசாக கொடுத்தது. இதை என் கழுத்தில் போட்டவன், “இது என் குருநாதர் எனக்கு கொடுத்ததுடா” என்றான். இப்படி உணர்ச்சிபூர்வமான ஒரு விஷயத்தை அமீர் பகிர்ந்து கொள்ள, இடை நுழைந்தார் பாலுமகேந்திரா.
இயக்குனர்கள் பயன்படுத்தும் வியூ ஃபைண்டர் அது. சத்யஜித்ரேவின் ஒளிப்பதிவாளர் எனக்கு பரிசாக கொடுத்ததிருந்தார். பாலா படம் துவங்கிய நேரத்தில் அவனை ஆசிர்வாதம் செய்து இந்த வியூ ஃபைண்டரை அவனுக்கு பரிசாக கொடுத்தேன். அது இப்போது அமீரிடம் வந்துவிட்டது. வர வேண்டிய இடத்திற்குதான் வந்திருக்கிறது! வாழ்த்துக்கள் என்றார். அதே நேரத்தில் அமீருக்கு ஒரு வேண்டுகோளும் வைத்தார். அமீர் நடித்துக் கொண்டிருப்பதாக அறிந்தேன். அரிதாரத்திற்குள் அவர் தொலைந்து போய்விடக் கூடாது. அவர் எப்போதும் இயக்குனர் அமீராகதான் இருக்க வேண்டும் என்றார்.
சினிமா பிரஸ் கிளப் ஆதிராஜன், ஆப்பிரகாம் லிங்கன் இருவரும் வரவேற்புரையும், நன்றியுரையும் வாசித்தார்கள்.