"தசாவதாரம்' படத்துக்குப் பிறகு அமீர்கானுடன் ஹிந்தி "கஜினி' படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அஸின், அடுத்து சல்மான்கான் ஜோடியாக ஒரு படம், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் ஒரு படம் என இரண்டு ஹிந்திப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இனி தமிழ்ப் படங்களில் அஸினைப் பார்க்க முடியாதா? என கேட்டால்...
""ஹிந்தியில் வாய்ப்பு வந்துள்ளது உண்மைதான். அதற்காக, அஸினுக்கு "ஸ்டார் வேல்யூ' ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்த் திரையுலகத்தை மறந்து விட முடியுமா? நல்ல கதை, கம்பெனி, ஹீரோ, டைரக்டர் அமைந்தால் தமிழில் நடிப்பார்'' என்று அஸின் தரப்பு கூறினாலும்... தற்போதைய நிலவரப்படி அவர் ஒப்புக்கொண்ட ஹிந்திப் படங்களை முடிக்கவே இரண்டு வருடங்கள் ஆகிவிடும். அந்தப் படங்களும் பெரிய ஹிட் ஆகிவிட்டால் பிறகு அஸினைத் தமிழில் பார்ப்பது சிரமம்தான். இருந்தாலும் கமல், ரஜினி படங்களில் நடிக்க அழைத்தால் உடனே சம்மதிப்பார் என்கிறது சினிமா வட்டாரம். கமல்ஹாசனின் அடுத்த படமான "மர்மயோகி'யில் அஸின், ஹேமமாலினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்பது இன்னொரு தகவல்.