எனக்கும், நிலாவுக்கும் இடையே இருப்பது நட்பு மட்டுமே. எங்களுக்குள் திருமண பந்தத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் ஆர்யா.
செல்வமணி - ரோஜா, ஜோதிகா - சூர்யா லெவலுக்கு இல்லாவிட்டாலும், சற்றே பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஜோடி ஆர்யா - நிலா. இவர்களுக்கு இடையே காதல், இருவரும் அடிக்கடி ஹோட்டல்களில் சந்தித்து காதல் வளர்க்கிறார்கள் என்று செய்திகள் அடிபட்டுக் கொண்டே இருக்கின்றன.
இது என்ன மாதிரியான காதல், எப்படி என்ற விவரம் சரிவர புரியாமல் இருந்து வந்தது. இப்போது தனக்கும், நிலாவுக்கும் இடையிலான பழக்க வழக்கம் குறித்து விளக்கியுள்ளார் ஆர்யா.
நிலாவுடனான நட்பு குறித்து ஆர்யா கூறுகையில், எங்களுக்குள் இருப்பது நல்ல நட்பு. இருவரும் அன்பாக இருக்கிறோம். நெருக்கமாகவே பழகியும் வருகிறோம். இது நட்பையும் தாண்டிய உறவுதான்.
பேசாமல், நிலாவை திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கூட நான் நினைத்தது உண்டு. ஆனால் விதி, எங்களை வெறும் நட்புடன் நிறுத்தி விட்டது. திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம், நிலாவுக்குள் இருப்பதற்கான அடையாளம் தெரியவில்லை.
நிலாவுக்கு நான் நல்ல நண்பனாக இருப்பேன். அவர் எனக்கு நல்ல தோழியாக இருப்பார்.
இன்னொரு பெண்ணை திருமணம் செய்வது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை. என் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா, பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமாக இருக்குமா? என்றும் தெரியாது. நேரம் வரும்போது, நல்லதாகவே நடக்கும் என்றார் ஆர்யா.
காதல் ஓ.கே., கடவுள்? இரண்டு வருடமாக நடைபெற்ற `நான் கடவுள்' படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பை காசியில் நடத்தினார்கள். படத்தின் இறுதி காட்சி, இறுதியாக படமாக்கப்பட்டது.
டைரக்டர் பாலா, படம் முழுக்க மிரட்டி இருக்கிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தேடித்தரும். என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்கிறார் தாடியை இழுத்து விட்டுக் கொண்டு.