மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தங்கள் மனம் விரும்பும் வகையில் மொபைல் போன் வைத்திருப்பதையே விரும்புகிறhர்கள். மேலும் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் மாதம் தோறும் புதிய புதிய மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகின்றன. பழையதைக் கொடுத்து புதியதை பெறுங்கள் என்று நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு 'எக்ஸ்சேஞ் ஆபர்'களை அறிவிப்பதால் பழைய மொபைல்களை கொடுத்து விட்டு புதிய மொபைல்களைபெறுவது அதிகரித்துள்ளது.
இதே போல பழைய கம்பியூட்டர்கள் மற்றும் பழைய எலக்ட்ரானிக் பொருட்களைக் கொடுத்து விட்டு புதிய பொருட்களை வாங்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எலக்ட்ரானிக் குப்பைகள் சேருவதும் அதிகரித்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் பழைய எலக்ட்ரானிக் குப்பையிலிருந்து தங்கம் கிடைக்கிறது என்கிறன ஜப்பான் நிறுவனங்கள். இது குறித்து யோகாமா மெட்டல் என்ற நிறுவனம் தெரிவித்து இருப்பதாவது:-
தங்கச்சுரங்கத்தில் ஒரு டன் மண்ணை எடுத்து சுத்தம் செய்தால்தான் அதில் இருந்து 5 கிராம் தங்கம் எடுக்க முடியும். ஆனால் எலக்ட்ரானிக் குப்பையில் ஒரு டன் எடையுள்ள குப்பையிலிருந்து சுமார் 150 கிராம் அளவுக்கு தங்கம் கிடைக்குமாம். இது தவிர வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் போர்டுகளிலும் மற்றும் கம்ப்யூட்டர் சிப்புகளில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் எலக்ட்ரானிக் குப்பையிலிருந்து அதிக அளவில் தங்கம் கிடைக்கிறது.
முதல் கட்டமாக எலக்ட்ரானிக் குப்பைகளை தரம் பிரித்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலுள்ள எலக்ட்ரானிக் போர்டுகள் மற்றும் கம்ப்யூட்டர் சிப்புகளை உடைத்து மணல் போல அரைத்து கொள்ள வேண்டும். இந்த எலக்ட்ரானிக் மணல் துகள்களுடன் ரசாயனக் கலவையைக் கலக்க வேண்டும். இதனால் தேவையற்ற பொருட்கள் தனியாக கரைந்து விடும். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் இதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனிமேலாவது உங்கள் பழைய மொபைல் போன்களைக் குப்பையில் போடும் முன்பு யோசித்துக் கொள்ளுங்கள்.