வேல் படத்தை அடுத்து ஹரி இயக்கவிருக்கும் படம் சேவல். ஒரு சேவலின் மேல் உட்காந்து பரத் சவாரி போவதுபோல் அழைப்பிதழ் அடித்திருந்தார்கள். இப்படி அழைப்பிதழ் மற்றும் விளம்பர விஷயங்களில் உப்புமாவாக இருந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது ஹரியின் படங்களில்!
சேவல் பற்றி என்ன சொல்கிறார் ஹரி? நான் இயக்கும் 9-வது படம் இது. வாலிப முறுக்கோடு ஒரு சேவல் போல் திரியும் ஒரு கிராமத்து வாலிபன், அடைகாக்கும் கோழியாக மாறி நடக்கும் கேரக்டரில் பரத் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரிடம் கதையை சொன்னபோது இதுபோல் ஒரு பாத்திரத்தில் நடித்ததில்லை. இந்த வேடத்தில் பரத்தை தூக்கி சாப்பிடப் போகிறேன் பாருங்கள் என்றார். தாமிரபரணி படத்தில், பிரபுவின் மனைவிதான் நதியா என்ற சஸ்பென்ஸ் எப்படி கடைசியில்தான் தெரிந்ததோ, அது போல இதிலும் சஸ்பென்சான வேடம் சிம்ரனுக்கு. படம் முழுக்க நெல்லை தமிழில் பேசியிருக்கிறார் பரத். 14-ந் தேதி குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார் ஹரி.
என்னை நடிப்பில் தூக்கி சாப்பிடுவதாக கூறியிருக்கிறார் சிம்ரன். பார்ப்போம்... யார் யாரை தூக்கி சாப்பிட போகிறார்கள் என்று? இப்படி மறுசவால் விடுகிறார் பரத். சபாஷ்... சரியான போட்டி!