எத்தனை கோடி செலவு செய்து படம் எடுத்தாலும், அதைவிட கூடுதல் பணம் கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். இதனால் லோக்கல் விநியோகஸ்தர்கள் திகைத்து போயிருப்பது வேறு விஷயம். குசேலன் படத்தை கிட்டதட்ட 60 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது பிரமிட் சாய்மீரா. தற்போது கமல் நடிக்கும் தசாவதாரம் படத்தை 90 கோடிக்கு கேட்டுக் கொண்டிருக்கிறதாம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம். ஆனாலும், படத்தை தானே ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
தசாவதாரம் படத்தில் இடம் பெறும் சில காட்சிகள் குறித்து ஆட்சேபம் தெரிவித்திருக்கும் இந்துத்வா அமைப்புகள், தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், இன்னொரு சிக்கலும் முளைத்திருக்கிறது இப்படத்தின் தயாரிப்பாளருக்கு. ஆஸ்கார் பிலிம்ஸ் என்ற இவரது நிறுவன லோகோ, ஹாலிவுட்டின் ஆஸ்கர் விருது கமிட்டியின் லோகோவை போலவே இருப்பதால், தங்களது லோகோவை தவறாக பயன்படுத்துவதாக கருதுகிறதாம் அந்நிறுவனம். இதையடுத்து தயாரிப்பாளர் ரவிச்சந்திரனிடம் விளக்கம் கேட்க முடிவு செய்திருக்கிறது இந்த ஹாலிவுட் நிறுவனம்.
தசாவதாரம் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் இந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர்.