கோயம்பேட்டில் நின்று கொண்டு லாகூருக்கே கேட்கிற மாதிரி வசனம் பேசும் விஜயகாந்த் படம்தானே என்ற அலட்சியத்தோடு உள்ளே போகிறவர்கள் முகத்தில் ஒரு கப் ஐஸ் வாட்டரை நச்சென்று ஸ்பிரே செய்கிறார் மாதேஷ். இது வேற மாதிரி படம் மச்சி...
படம் துவங்கி 20 நிமிடம் கழித்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகமாகும் கேப்டன், முதல் ஆச்சர்யம்! அதன்பின் தன் திரைக்கதை திருப்பங்களால், தியேட்டரையே புரட்டிப் போடுகிறார் இயக்குனர் மாதேஷ். விஞ்ஞானிகளையும், எதிர்கால இந்தியாவின் வலுவான தூண்களையும், சைலண்டாக போட்டுத்தள்ளும் கும்பலை பிடிக்க மும்பையிலிருந்து ஒரு போலீஸ் ஆபிசர் வருவதாக பேசிக் கொள்கிறார்கள். இந்த இடத்தில் வழக்கமாக ஹீரோதானே வருவார்? ஆனால் வருவது பிஜுமேனன். மும்பையில் பிளைட் ஏறுகிறவர், சென்னைக்கு வந்திறங்காமல் இடையே தொலைந்து போவது இன்னொரு ட்விஸ்ட்? பிஜுமேனனை கண்டுபிடிக்க சென்னை வரும் ஸ்பெஷல் ஆபிசர் விஜயகாந்த், முடிச்சை தேடி கனடா வரை போய், தீவிரவாதிகளை வேரறுக்கிறார். இடையிடையே சென்ட்டிமென்ட், லவ், டூயட் என்ற துக்கடா சமாச்சாரங்கள், கொட்டாவியை விரட்டுகிறது.
சாகிற தருணத்திலும் போலீஸ்கார புத்தியோடு சாகும் பிஜுமேனன், தனது வாயில் இருக்கிற சூயிங்கத்தில் சிம் கார்டை ஒளித்து வைப்பது எதிர்பாராத திருப்பம்! ஆனால், கனடாவில் இருக்கிற தீவிரவாதி பிஜுமேனன் டிபிக்கலான தமிழ் சினிமா வில்லன். என்ன ஒன்று? பாழடைந்த பங்களாவுக்கு பதிலாக, கொஞ்சம் பளபளக்கிற இடத்தில் ஹீரோவை கட்டிப் போடுகிறார்கள்.
சண்டைக்காட்சிகளில் இன்னும் தன்னை சிறுத்தையாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் கேப்டன். எத்தனை பெரிய தீவிரவாதியாக இருந்தாலும், தனி ஒரு மனிதனாக அணுகுவது ஹீரோயிசம்தான். அதற்காக போலீஸ் உதவியே தேவைப்படாமல் இவர் தனி ராஜ்ஜியம் நடத்துவது போர். படத்தில் இவருக்கு வழங்கப்பட்ட காஸ்ட்யூம்கள் கச்சிதம். அழகான ஷெரிலுடன் இவர் ஆடும் டூயட்டுகள் அழகு.
கட்டழகு ஷெரில் ஸ்கிரீனில் வரும்போதெல்லாம் ஷவரில் குளித்த திருப்தி. நடிக்க அதிகம் வாய்ப்பில்லை. விட்டால், விஜயசாந்தி இடத்தை பிடிப்பார் போலிருக்கிறது. கனடா போலீஸ் ஆச்சே? சும்மாவா.
சாகிற தருவாயில் கணவனின் கதறலை கேட்க பிரியமில்லாமல் தனது ஹியரிங் எய்டை கழற்றிவிட்டு சாகிற கேப்டனின் மனைவி நவ்னீத் கவுர், குணச்சித்திர நடிகையாக மனதில் இடம் பிடிக்கிறார்.
கஷ்டப்பட்டு வில்லனை பிடித்தால், மருத்துவமனை பெட்டில் அவனுக்கு பதிலாக ஒரு தாத்தா! விடுங்க, காவலுக்கு நின்ற அதிகாரிகளிடம், துறை ரீதியாக ஒரு விசாரணை கூடவா இருக்காது? வேகமான பயணத்தில் போலீஸ் ஜீப்பை பஞ்சராக்கும் இப்படிப்பட்ட காட்சிகளும் உண்டு.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை கலக்கல். கனடாவை பாஸ்போர்ட் இல்லாமல் காட்டிய புண்ணியம் ஒளிப்பதிவாளரை போய் சேரும்.
விஜயகாந்தின் அரசாங்கத்தில் ஆக்டிவான ஆபிசர் மாதேஷ்தான்! மெடலே குத்தலாம்!