தெனாவட்டு படத்தை முடித்துவிட்ட ஜீவா, அடுத்து சிவா மனசுல சக்தியில் பிசியாகிவிட்டார். இப்படத்தை விகடன் டாக்கீஸ் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ராஜேஷ்.எம்.
இது எந்த மாதிரியான கதை? ஒரு இளம் பெண்ணுக்கும், பையனுக்கும் ஒரு வருடத்திற்குள் நடக்கும் கதை இது. தமிழ் சினிமாவில் காதலர்களுக்கிடையே நடக்கும் ஈகோ யுத்தத்தை சொன்ன படங்கள் அனைத்துமே வெற்றியடைந்திருக்கின்றன. குஷி, உன்னாலே உன்னாலே ஆகிய படங்களை லேட்டஸ்ட் உதாரணமாக சொல்லலாம்.
சிவா மனசில சக்தியும் இந்த வகை படம்தானாம். தமிழ் சினிமாவின் எல்லா இயக்குனர்களும் உச்சரிக்கும் கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையை ராஜேஷ§ம் விடாமல் பிடித்துக் கொள்கிறார். கொஞ்சம் வித்தியாசமாக, “இரண்டு காதலர்களுக்குள் நடக்கும் கெமிஸ்ட்ரியின் விளைவை சொல்லும் ஹிஸ்ட்ரி” என்கிறார். முழு படத்தையும் சென்னையிலேயே எடுத்துவிடும் முடிவில் இருக்கிற ராஜேஷ், பாடல் காட்சிக்காக மட்டும் வெளிநாடு போக முடிவு செய்திருக்கிறாராம்.
மொத்தம் 70 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டிருக்கும் ராஜேஷ், முதல் கட்டமாக 20 நாட்களை முடித்திருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசையின் அடுத்த கட்டத்தை தொட்டிருப்பதாக சொல்கிறார் ராஜேஷ்.
ஆர்மோனியத்தின் அடுத்த கட்டையை கூட தெரிந்து கொள்ளாத நமக்கு, ராஜேஷ் சொன்னது புதிராகவே இருக்கிறது. இருந்தாலும், பாடல்களை கேட்டால் இவர் சொன்னதை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவோமாக!