விண்வெளி விதைகளை விதைத்து, வழக்கத்தை விட, மிகப்பெரிய அளவில் பூசணி, கத்தரிக்காய், கோஸ் போன்ற காய்கறிகளையும், ஆரஞ்சு, வாழை போன்ற பழங்களையும் சீன விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். மரபணுவில் மாற்றம் செய்து, விதைகளை உற்பத்தி செய்து, அவற்றை விண்வெளிக்கு அனுப்பி, திரும்ப வரவழைத்து பூமியில் விதைத்தால், காய்கறிகள், பழங்கள் பல மடங்கு பெரிதாக வளர்க்க முடியும் என்று சீன விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2006 ம் ஆண்டு, "சிசியான்' என்ற நவீன செயற்கைக் கோளை விண்வெளிக்கு சீனா அனுப்பியது. விண்ணில் ஏவினாலும்,மீண்டும் அதை பூமிக்கு கொண்டு வர முடியும். இந்த செயற்கைக்கோளில் 2,000 விதைகள் அனுப்பப்பட்டன. விண்ணுக்கு சென்று, மீண்டும் செயற்கைக்கோள் திரும்பி பூமிக்கு கொண்டு வரப்பட்டது. அதில் வந்த விதைகளை பூமியில் விதைத்து விவசாயம் செய்ததில், காய்கறிகள், பழங்கள் பல மடங்கு பெரிதாக வளர்ந்தது. ஆளுயர முருங்கைக்காய், பூசணி வளர்ந்தது.
தெற்கு சீனாவில் உள்ள விவசாயிகள், இப்போது இந்த வகை விதைகளை தான் விதைத்து பயிர் செய்கின்றனர். விண்வெளிக்கு அனுப்பி வரவழைக் கப்பட்ட விதைகளை ஆய்வு மையங்களில், பகுத்துணர்ந்து, அதை மரபியல் முறையில், பல ஆயிரம் விதைகளாக உருவாக்கி, அவை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "இயற்கையான முறையில் கிடைக்கும் விதைகளை பயிர் செய்வதை விட, இந்த விண்வெளி விதைகளை விதைத்து பயிர் செய்தால், பல மடங்கு பெரிதான காய்கறி, பழங்கள் கிடைப்பது மட்டுமல்ல, அவற்றில் வைட்டமின், கனிமசத்துக்களும் அதிகமாக உள்ளன. மனிதர் களுக்கு இது மிகவும் பயனுள்ளது. சீன மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்கும் நிலையில் உணவுத்தட்டுப்பாட்டை சமாளிக்க இந்த முறை உதவும்' என்று தெரிவித்தனர்.