'தசாவதாரம்' படத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் 'ஆஸ்கார் பிலிம்ஸ்' ரவிச்சந்திரன் அளித்த பதில் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் உள்ள பல காட்சிகள் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்றும், அக்காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் `இன்டர் நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரட்சணா' சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அம்மனுவில், "பொதுநலன் என்ற பெயரில் இலவசமாக விளம்பரத்தை தேடவும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையிட மத்திய தணிக்கை குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்பிறகும் மனுதாரரின் விருப்பத்திற்கேற்ப காட்சிகளை நீக்க வேண்டுமென்று கேள்வி எழுப்ப முடியாது," என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறிய அவர், "இப்போது கதை, கரு அமைப்பை வெளியிட்டால் தங்கள் வர்த்தகம் பாதிக்கும். பொதுநலன் என்ற போர்வையில் மத நல்லிணக்கங்களை சீர்குலைக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆகவே, குண்டர் தடுப்பு சட்டம் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று ரவிச்சந்திரன் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்.
தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், "இந்தப் படத்தை தயாரிக்க ரூ.100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. என்றும், படத்தின் தாமதத்தால் தினசரி ரூ.2 கோடி இழப்பு ஏற்படும். மேலும், 1,000 பட பிரதிகள் எடுக்க 15 நாட்கள் ஆகும் என்பதால், இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, படத்திற்கு எதிராக எந்தத் தடையும் பிறப்பிக்கப்படாததால், மற்றப்பணிகளை தொடர்ந்து செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும், தணிக்கை குழு அதிகாரியும் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.