எத்தனையோ நாள் முன்பு நடந்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு வாரம்...ஒரு மாதம்...? 27 ஆண்டாக, ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்களை நினைவுகூறுகிறார் ஒரு அதிசய பெண்.
அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண் ஜில் பிரைஸ்; வயது 42. "கடந்த மாதம் 14 ம் தேதி எங்கு போனீர்கள்? 28 ம் தேதி என்ன சாப்பிட்டீர்கள்?' என்பது முதல், பல ஆண்டுக்கு முன், சந்தித்த ஒருவரை பற்றி கூட சொல்கிறார். கடந்த 27 ஆண்டில் அவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் குறித்தும் சொல்கிறார் இவர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அசந்து விட்டனர். இவர் குறித்து நிபுணர்கள் கூறியதாவது: ஒருவரால், குறிப்பிட்ட காலம் வரை தான் நினைவாற்றல் மூலம் எந்த விஷயத்தையும் சொல்ல முடியும். ஆனால், ஜில்லுக்கு அளவுக்கு மீறி நினைவாற்றல் இருக்கிறது. இதற்கு காரணம், அவர் மூளையில் உள்ள ஒரு வித அசாத்தியமான சக்தி தான். இது உண்மையில் நல்லதல்ல; ஒரு வகை மனநல வியாதி. இந்த வியாதிக்கு ," ஹைபெர்த்திமெஸ்டி' என்றுபெயர்.
கடந்த 1980ம் ஆண்டில் இந்த பெண்ணுக்கு வயது 14. அப்போது தான் இந்த "போபியா' ஆரம்பித்துள்ளது. நல்ல விஷயங்கள் அறிந்து கொள்வதுடன், கெட்ட நினைவுகள் வரும் போது மன அழுத்தம் ஏற்படும். இதனால், இந்த பெண்ணுக்கு தனி சிகிச்சை தேவை.இந்த அளவு அசாத்திய நினைவாற்றல் இருக்கும் நிலையில் திடீரென இது எதிரிடையாகக்கூட மாறலாம்; நினைவாற்றல் மங்கி விடலாம். இவ்வாறு நிபுணர்கள் கூறினர். பள்ளி ஒன்றின் நிர்வாகியாக பணியாற்றும் ஜில் கூறுகையில்,"எனக்கு பழைய நினைவுகள் வருவதால் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால், சில மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள் பற்றி நினைவு வரும் போது பெரிதும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதனால் மனஅழுத்தம் வந்து பெரும் அவதிப்படுகிறேன். இந்த அசாத்திய நினைவாற்றல் எனக்கு நல்லதை விட, கெட்ட தை தான் தருகிறது' என்றார்.