ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் யூய்ச்சிரோ மியூரா. இவருக்கு இப்பொது 75 வயதாகிறது. இந்த வயதில் அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக அடிவாரத்திலுள்ள முகாமிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டு விட்டார். அவர் வருகிற 26-ந் திகதி எவரெஸ்ட் சிகரத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் அவரது 2-வது மகன் கோட்டாவும்(வயது 38) சென்று இருக்கிறார்.
திபெத் வழியாகச் செல்வதைக் கை விட்டுவிட்டு, நேபாளம் வழியாக அவர்கள் மலை ஏறுகிறார்கள். இவர் 1970-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அங்கிருந்த படியே அவர் பாரசூட் மூலம் குதித்தார்.இந்த சாதனை டாகுமெண்டரி படமாக எடுக்கப்பட்டு அதற்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இந்த படத்துக்கு தி மேன் ஹ{ ஸ்கைடு டவுன் எவரெஸ்டு என்று பெயர்.
70 வயதில் 29028 அடி உயரமுள்ள மலைச் சிகரத்திலேறி சாதனை படைத்தார். அதன் பிறகு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. அவற்றுக்குப் பிறகு குணமடைந்த இவர் இப்போது மீண்டும் மலை ஏறி வருகிறார். இந்த வயதில் மலை ஏறும் முதல் மனிதர் இவர் தான். கடந்த ஆண்டு 71 வயது ஜப்பானியர் எவரெஸ்ட் சிகரத்திலேறி சாதனை படைத்தார். இந்த சாதனையை இவர் முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.