இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்க் பாய்லே என்ற 28 வயது வாலிபர், இந்தியாவில் மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தருக்கு நடைபயணமாக செல்ல விரும்பினார். அவர் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு எதிராக பிரசாரம் செய்யும் நோக்கத்தில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள நினைத்தார். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். உணவோ, பணமோ எதுவும் எடுத்துச் செல்லாமல், உடுத்தி இருந்த டீ-சர்ட், காலணி மற்றும் பையுடன் புறப்பட்டார். வழியில் தென்படும் மக்களிடம் உணவு, தங்குமிடத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால், அதில்தான் அவரது கணக்கு தவறாகி விட்டது. இங்கிலாந்தில் நடைபயணம் சென்றவரை, அவருக்கு உணவு கிடைத்தது. ஆனால் பிரான்சு நாட்டுக்குள் நுழைந்தவுடன் நிலைமை மாறியது. அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே, அவரால் தனது பயண நோக்கத்தை விளக்க முடியவில்லை. பிரான்சு மக்கள், அவரை பிச்சைக்காரர் போல நினைத்தனர். உணவு தர மறுத்தனர். அதனால் நடைபயணத்தை தொடர்வது சிரமமாகி விட்டது. ஆகவே, பிரான்சு நாட்டில் கலைஸ் என்ற இடத்தில் தனது நடைபயணத்தை முடித்துக் கொண்டார். பிரெஞ்சு மொழியை கற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டு மீண்டும் நடைபயணம் செல்லப்போவதாக அவர் கூறுகிறார்.