அதிபர் முஷரப் பதவி விலக மாட்டார், புதிய அரசுடன் இணைந்து செயல்படுவார் என்று அவரது செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
ராஜினாமா வதந்தி
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கும், 4 மாகாண சபைகளுக்கும் கடந்த 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், அதிபர் முஷரப்பை ஆதரிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (க்ï) படுதோல்வி அடைந்தது. பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான முஸ்லிம்லீக் கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றின. புதிய அரசு இந்த வாரம் பதவி ஏற்கிறது.
புதிய அரசு, அதிபர் முஷரப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவி நீக்கம் செய்யும் என்று பரவலாக பேசப்பட்டது. அத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, முஷரப்பே பதவி விலகி விடுவார் என்றும் கருதப்பட்டது.
மறுப்பு
இந்நிலையில், முஷரப்பின் செய்தித்தொடர்பாளரும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான ரஷித் குரேஷி, இந்த ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-
அதிபர் முஷரப் ராஜினாமா செய்வார் என்று வெளியான செய்தி தவறானது, அடிப்படை முகாந்திரம் இல்லாதது. அவர் பதவி விலக மாட்டார். புதிய அரசுடன் இணைந்து செயல்படுவார். அதுபோல், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளும் முஷரப்புடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன. நவாஸ் ஷெரீப் கட்சி மட்டுமே, முஷரப்புடன் இணைந்து பணியாற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறது.
நவாஸ் ஷெரீப்பும், அவரைச் சுற்றியுள்ள 100, 200 பேர் கும்பலும் மட்டுமே முஷரப் பதவி விலக வேண்டும் என்று கோரி வருகிறார்கள். முஷரப்புடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று நவாஸ் ஷெரீப் திரும்ப திரும்ப கூறி வருகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை.
நீதிபதிகள் மறுநியமனமா?
மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு பெனாசிர் கட்சியை முஷரப் கேட்டுக்கொண்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதுவும் பொய்யான செய்தி. இதில் உண்மை இல்லை. பெனாசிர் கட்சியும் இதை மறுத்துள்ளது.
பத்திரிகையாளர்கள், அதிபரை பற்றி செய்தி வெளியிடும்போது, அச்செய்தியை உறுதிப்படுத்திய பிறகே வெளியிட வேண்டும். இதற்காக, அவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம். அதுதான் பத்திரிகைகளுக்கான நன்னடத்தை. தவறான செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோதலை விரும்பாத பெனாசிர் கட்சி
இதற்கிடையே, அதிபர் முஷரப்புடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்று பெனாசிர் கட்சியின் மூத்த தலைவர் ஷா மக்மத் குரேஷி தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், பாராளுமன்றத்தையும், மாகாண சபைகளையும் கலைக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.