பாலஸ்தீனத்தின் தலைநகர் காஸாவில் நடந்த தாக்குதல் சம்பவங்களுக்கு கவலைத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்), இஸ்ரேலும் பாலஸ்தீனமும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த புதன்கிழமையிலிருந்து காஸாவில் நடந்த கடும் சண்டையில் இதுவரை 17 குழந்தைகள் பலியாகியுள்ளதாக யுனிசெஃப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களால், அந்நாட்டு குழந்தைகள் மன அழுத்தம் உள்ளிட்ட பெருத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போதைய சூழல் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காஸாவில் நேற்று இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 54 பேர் பலியான சம்பவத்துக்கு, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சூழல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அவசர கூட்டமும் நடத்தப்பட்டது.