காசா பகுதியில் மீது இஸ்ரேல் தற்போது மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேலுடனான தொடர்புகளை உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தியுள்ளார்.
இஸ்ரேலியத் தாக்குதல்களில் கடந்த புதன்கிழமையிலிருந்து குறைந்தபட்சம் நூறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பொதுமக்கள் என்று பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று இஸ்ரேலியர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பரில் அமெரிக்காவில் நடந்த சமாதான மாநாட்டிற்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையால் அர்த்தமற்றதாகிவிட்டது என்று அதிபர் அப்பாஸின் சகா ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முயலவே இந்த ராணுவ நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறுகிறது, ஆனாலும் இன்றும் இஸ்ரேலின் ஸ்ரெராட் நகரில் ராக்கெட்கள் வீசப்பட்டிருந்தன.