பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து பர்வேஸ் முஷாரப் இன்னும் 2 நாளில் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் காரணமாக அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஷாரப் ஆதரவு கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருமின்றன.
தேர்தலில் அதிக இடங்களை பிடித்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப் கட்சியும் ஆட்சியமைத்த பிற்கு முஷாரப்பை பதவி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் முஷாரப்பை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷஃபக் கயானி சந்தித்துப் பேசியதாகவும் , அப்போது அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து இன்னும் இரண்டு மூன்று நாளில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் ஒப்புக்கொண்டதாகவும் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இத்தகவல அனைத்து ஊடகங்களுக்கும் பரவியதையடுத்து பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் , இச்செய்திக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இச்செய்தியில் துளியு உண்மையில்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் அத்தார் அப்பாஸ் தெரிவித்தார்.
அதேபோன்று அதிபர் முஷாரப்பின் செய்தி தொடர்பாளர் ரஷித் குரேசியும் இச்செய்தியை மறுத்துள்ளார்.