அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெக்சாஸ் மற்றும் ஓகியோ மாகாணங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
.
இந்த வாக்குப்பதிவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் கருப்பின தலைவரான பாரக் ஒபாமாவிற்கும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த மாதம் 5ந் தேதி நடைபெற்ற முதல் சூப்பர் டியூஸ்டே வாக்குப்பதிவுக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவுகளில் 11 இடங்களில் வெற்றி பெற்று பாரக் ஒபாமா முன்னிலையில் உள்ளார்.
டெக்சாஸ், ஓகியோ, ரோடி தீவுகள் மற்றும் வெர்மாண்ட் மாகாணங்களில் நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவில் ஒபாமா வெற்றி பெற்றால் அதிபர் பதவிக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அவர் தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
டெக்சாஸ் மற்றும் ஓகியோவில் வெற்றி பெற்றால் தாம் அதிபர் பதவிக்கு போட்டியிடுவது உறுதி என்று பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
டெக்சாசில் வெற்றி பெறாவிட்டால் அதிபர் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் ஹிலாரி நீடிப்பது கடினம் என்று அவரது கணவர் கிளிண்டன் கூறியுள்ளார்.
இதனிடையே குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அர்கன்சாஸ் கவர்னர் மைக் உகாபியை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ள ஜான் மெக்கைன், டெக்சாஸ் மற்றும் ஓகியோவிலும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.