இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான சமீபத்திய வன்முறைகள் குறித்து தாம் கவலைப்படுவதாக, அமெரிக்காவின் அரசுத்துறை செயலர் காண்டொலீசா ரைஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இவர்களுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் ஒன்று இந்த ஆண்டில் எட்டப்படக் கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாலஸ்தீனத் தலைவர்கள் இஸ்ரேலுடனான தமது பேச்சுவார்த்தைகளை துவங்கவேண்டும் என்று ரமல்லாவில் பேசுகையில் ரைஸ் அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல் நடவடிக்கைகளை கண்டித்து, இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், கடந்த வார இறுதியில் இடைநிறுத்துவதாக அறிவித்தார்.
இந்த தாக்குதலில் நூற்று இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப் பட்டார்கள்.
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்திருக்கும் அப்பாஸ் அவர்கள், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த பாதுகாப்பை அடைய முடியாது என்று கூறினார்