அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்தலில், மிக முக்கியமாக கருதப்படும் ஓஹியோ உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி வெற்றி பெற்றார். இதன்மூலம் பராக் ஒபாமாவின் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
டெக்சாஸ், ஓஹியோ மற்றும் ரோடி தீவு ஆகிய மாகாணங்களில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றுள்ள நிலையில், வெர்மோன்ட் மாகாணத்தில் மட்டுமே ஒபாமா வெற்றி பெற்றார்.
அதேநேரத்தில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதில் மேலும் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கு, இதுவரை நடந்து முடிந்த கட்சித் தேர்தல்களில் ஹிலாரி மற்றும் ஒபாமா ஆகிய இருவருக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு வித்தியாசம் இல்லை என்பதே காரணம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை.
இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்த கட்சித் தேர்தல்களில், 24 மாகாணங்களில் வெற்றி பெற்ற ஒபாமா, 1,443 பிரதிநிதிகளின் ஆதரவினை தன்னகத்தே கொண்டுள்ளார்; அவரைக் காட்டிலும் சற்று பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,351 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
தற்போது மூன்று மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ள ஹிலாரி, 'நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம்; வலுவான நிலையில் சென்று கொண்டிருக்கிறோம்' என்று ஓஹியோவில் தனது ஆதரவாளர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசினார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கைன்தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியைச் சேர்ந்த 1,191 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 20 மாகாணங்களில் வெற்றி பெற்ற அவர், 1,215 பிரதிநிதிகளின் ஆதரவுடன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.