மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவின் நிதி நிறுவன தலைவர் வாரன் பஃப்பே உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது.
.
இந்த ஆண்டிற்கான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் பெர்க்ஷயர் ஹாத்வே நிதி நிறுவனத்தின் தலைவரான 77 வயதாகும் வாரன் பஃப்பே முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு 62 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 52 பில்லியன் டாலராக இருந்தது. பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் இந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மெக்சிகோவின் தொலை தொடர்பு நிறுவனத்தை நடத்தி வரும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு 60 பில்லியன் டாலருடன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
தனது வருமானத்தில் பெரும் பகுதியை பில்கேட்ஸ் நடத்தி வரும் பில் அண்டு மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக அளிப்பதாக கடந்த 2006 ஆம் ஆண்டு வாரன் பஃப்பே அறிவித்திருந்தார்.
இவரது நிறுவனமான பெர்ஷயர் ஹாத்வே பங்குகளின் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக இந்த ஆண்டு உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை வாரன் பஃப்பே பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 1125 பெரும் கோடீஸ்வரர்கள் இருப்பதாக போர்ப்ஸ் பட்டியலிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இது 946 ஆக இருந்தது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 4.4 டிரில்லியன் டாலராகும். பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 469 பேருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 87 பேருடன் ரஷ்யா உள்ளது.
பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 53 பேருடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இவர்களில் 4 பேர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜப்பானில் 24 பேர் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சிறிய நாடான துருக்கி ஜப்பானையும் முந்தி 35 பெரும் கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் சீனாவை சேர்ந்த 42 பேரும், ஹாங்காங்கை சேர்ந்த 26 பேரும் இடம் பெற்றுள்ளனர்.