பிரிட்டனில் அடுத்த சில வருடங்களில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் அடையாள அட்டைகள் பற்றிய சர்ச்சைக்குரிய திட்டங்கள் பற்றிய விபரங்களை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டிருக்கிறது.
அட்டை வைத்திருப்பவரின் கைரேகை, கண்ணின் விழிப்பாவை, முகவடிவம் ஆகியவற்றின் ஸ்கேன் விபரங்கள் அடங்கிய இந்த அதிநவீன அடையாள அட்டைகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து பிரிட்டனில் தொழில்பார்க்க வருவோருக்கு இவ்வாண்டின் பிற்பகுதியில் வழங்கப்படவிருக்கின்றன.
அடுத்த ஆண்டிலிருந்து இவை பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு அவசியம் மிகுந்த இடங்களில் பணியாற்றுவோர்க்கு இந்த அட்டை முதலில் விநியோகிக்கப்படும்.
பயங்கரவாதம் போன்ற பல குற்றங்களை எதிர்த்துப் போராட இந்தப் புதிய அடையாள அட்டைகள் உதவும் என்று பிரிட்டிஷ் அரசு நம்புகிறது.