பாகிஸ்தானில் சமாதானம் பேணப்படுமாயின் புதிதாக பதவியேற்கவுள்ள கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி முஷாரப் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை தென் சிந்து மாகாணத்தில் நீர் விநியோகத் திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே முஷாரப் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தை ஸ்தாபிக்கவுள்ள இரு பிரதான கட்சிகளும் முஷாரப்பை பதவி விலக வலியுறுத்தி வருகின்ற நிலையில், முஷாரப்பின் இந்த உரை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
""பாகிஸ்தானின் மத்திய மற்றும் மாகாண சபைகளில் எதிர்வரும் 5 வருட காலப் பகுதியில் நிலைத்திருக்கக் கூடிய உறுதியான அரசாங்கம் உருவாக்கப்படுவது அவசியமாகவுள்ளது. இந்நிலையில் புதிய அரசாங்கமானது சமாதானத்தை சிறந்த முறையில் பேணுமாயின், அவ்வரசாங்கத்திற்கு எனது முழு ஆதரவையும் வழங்க நான் தயாராகவுள்ளேன் என உறுதியளிக்கிறேன்'' என முஷாரப் இதன்போது குறிப்பிட்டார்.