மலேசியாவுக்கு சென்ற தொழில் அதிபர் சூட்கேசில் இருந்த துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோதனை
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு நேற்று அதிகாலை ஒரு விமானம் செல்ல தயாராக இருந்தது. இதில் ஏற வந்த பயணிகளை விமான நிலைய பாதுகாப்பு போலீசார் சோதனை போட்டனர்.
அப்போது சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழில் அதிபர் பரமசிவம் (வயது 46) என்பவரின் சூட்கேசை `ஸ்கேனில்' வைத்து சோதனை போட்டனர். அப்போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக `சைரன்' ஒலித்தது. இதனால் பரபரப்படைந்த அதிகாரிகள் சூட்கேசை கொண்டு வந்த பரமசிவத்திடம், ``அதில் என்ன உள்ளது? என கேட்டனர். அதற்கு பரமசிவம், சூட்கேசில் எதுவும் இல்லை என கூறினார்.
துப்பாக்கி குண்டுகள்
சந்தேகமடைந்த அதிகாரிகள் சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில், 7.65 எம்.எம். அளவு கொண்ட துப்பாக்கி குண்டுகள் 5 இருந்தன. உடனே அதிகாரிகள் பரமசிவத்திடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், ``தொழில் தொடர்பாக நான் மலேசியாவிற்கு செல்கிறேன்; துப்பாக்கியை பயன்படுத்துவதற்குரிய லைசென்சு உள்ளது. ஆனால் சூட்கேசில் இருந்த துப்பாக்கி குண்டுகளை தவறுதலாக கொண்டு வந்து விட்டேன்'' என கூறினார்.
பின்னர் அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். தூப்பாக்கி குண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதே விமானத்தில் அவரை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தூப்பாக்கி குண்டுகளை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.