ஈராக்கில் சுமார் 100 அழுகிய சடலங்களைக் கொண்ட பாரிய மனிதப் புதை குழியொன்றை அந்நாட்டு படையினர் கண்டுபிடித்துள்ளனர். தலைநகர் பக்தாத்தின் வடக்கேயுள்ள காலிஸ் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்புதை குழியானது கடந்த பல மாதங்களில் ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனித புதைகுழிகளிலொன்றாக விளங்குகிறது.
இது 2003 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நிலைகொண்டதற்கு பிற்பாடு உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும் இம்மனித புதைகுழி உருவாக்கத்திற்கு அமெரிக்க படையினரா ஈராக்கிய படையினரா காரணம் என்பது தொடர்பில் தெளிவாகக் கூற முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல் கரீம் அல் ருபேயி தெரிவித்தார். ""எங்களால் சடலங்களை அடையாளம் காண முடியாதுள்ளது. சடலங்கள் முழுமையாக அழுகி உருக்குலைந்து எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன'' என அவர் மேலும் கூறினார்.
சதாம் ஹுசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் இதையொத்த பாரிய பல மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என மனித உரிமைகள் அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன. இப்படுகொலைகளுக்கு அல் கொய்தா போராளிகளே காரணம் என அமெரிக்க மற்றும் ஈராக்கிய படையினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.