ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப் பெரியதும் அதி முன்னேற்றகரமான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதுமான விண்கலம், இன்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. மனிதர்களற்ற 20 தொன் நிறையுடைய இந்த சரக்கு விண்கலமானது பிரெஞ் கயானாவிலுள்ள கொயுரோயு விண்கல ஏவுதளத்திலிருந்து "ஏரியன் 5' ஏவுகணையைப் பயன்படுத்தி ஏவப்பட்டது.
"தன்னியக்க மாற்றீட்டு ஊர்தி' (ஏரிவி) வகையினைச் சேர்ந்த இவ் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான மீள் விநியோக செயற்பாட்டை மேற்கொள்ளவுள்ளது. இதன் பிரகாரம் 5 தொன் நிறையுள்ள உணவுகள், நீர், வாயு, எரிபொருள் மற்றும் உபகரணங்கள் இவ்விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முகாமையாளர் அலன் திர்கெட்டிக் விபரிக்கையில், ""இது மிகவும் முக்கியமான முன்னேற்றகரமான நிலையாகும். தற்போது எம்மால் அனுப்பப்பட்டுள்ள "ஏரிவி' விண்கலமானது விண்கலங்களுக்கும் செயற்கை கோள்களுக்கும் இடையிலான இணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. ஐரோப்பிய தொழிற்றுறையிலான புதிய தொழில்நுட்ப அபிவிருத்திகளின் பெறுபேறாகவே இவ்விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.