|
செர்பியா நாட்டில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அங்கு புதிதாகத் தேர்தல் நடத்த பிரதமர் கோஸ்டுனிகா முடிவு செய்துள்ளார்.
செர்பியாவை ஐரோப்பிய யூனியனுடன் சேர்ப்பது, கொசாவா பகுதியை சுதந்திர நாடாக அறிவிப்பது ஆகிய பிரச்சினைகளில் கூட்டணி கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாததால், அரசு கவிழ்ந்துவிட்டதாக பிரதமர் கோஸ்டுனிகா அறிவித்தார்.
ஒரே மாதிரியான கொள்கை இல்லாத அரசு செயல்பட முடியாது. இத்துடன் இந்த அரசு முடிவுக்கு வந்துவிட்டது. இடைக்கால அரசின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும். நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபர் போரிஸ் டாடிக்கை கேட்டுக் கொள்ள அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மே 11-ம் தேதி தேர்தல் நடத்தவும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
கொசாவாவில் தனிநாடு கோருவோருக்கு எதிராக செர்பியா அடக்குமுறைகளைக் கையாண்டது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டது. 1999 முதல் கொசாவா பகுதி ஐ.நா. படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
செர்பியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படுவதாக கொசாவா கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அறிவித்தது.
பிரிஸ்டினா என்பவர் தலைமையில் அங்கு அமைந்துள்ள அரசு சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்று செர்பியா நிராகரித்தது. வரலாற்று ரீதியிலும் மத அடிப்படையிலும் கொசாவா தங்களது பகுதி என்று செர்பியா கூறி வருகிறது. |