மலேசிய பிரதமராக அப்துல்லா அகமத் படாவி இன்று மன்னரின் அரண்மனையில் பதவியேற்றுக் கொண்டார்.
அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 139 இடங்களை மட்டுமே பாரிசன் தேசிய அணி கைப்பற்றிய நிலையில், மன்னர் மிஸன் ஸைனல் அபிதின் முன்னிலையில் படாவி பதவியேற்றார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ள ஆளும் பாரிசன் தேசிய கூட்டணிக்கு 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி கிடைக்காமல், இம்முறை சாதாரண பெரும்பான்மை பலம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால், முக்கிய அரசியல் சட்டங்களை இயற்றுவதில் எதிர்கட்சிகளின் தயவு அரசுக்கு கட்டாயம் தேவையாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
முந்தைய தேர்தலின்போது 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த அன்வர் இப்ராகிமின் மக்கள் நீதிக் கட்சி தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மொத்தமுள்ள 13 சட்டசபைகளில் 5 இடங்களில் ஆளும் கூட்டணி தோல்வியைத் தழுவியது பெரும் பின்னடைவாகும்.