வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவாமி லீக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா நாடாளுமன்ற வாளகத்தில் உள்ள சிறையில் கடந்த 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்தார்.
60 வயதான இவர் செவிப்பறை பாதிப்பு, ரத்தம் அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவர் செவ்வாய்க்கிழமை டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஹசீனாவுக்கு கேட்கும் திறன் குறைந்து வருகிறது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்துள்ளோம். இல்லையென்றால் அவர் கேட்கும் சக்தியை முழுவதுமாக இழந்து விடுவார் என மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கைதியாக உள்ள ஒருவரை சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்புவதில்லை. இருந்த போதிலும் டாக்டர்களின் பரிந்துரையை அரசிடம் எடுத்துச் சொல்வோம் என சிறைத்துறை அதிகாரி ஷம்சுல் சித்திக் தெரிவித்தார்.
ஹசீனாவுக்கு வங்கதேசத்தில் சிகிச்சையளிப்பது என்பது இயலாத காரியம். அவரது இடது காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்து விட்டது. வலது செவியிலும் கேட்கும் திறன் குறைவாகவே உள்ளது என ஹசீனாவை பரிசோதித்த டாக்டர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.