விபச்சாரத்திற்கு துணை போனதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னர் எலியாட் ஸ்பிட்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
.
நியூயார்க் மாகாணத்தில் கடந்த 100 ஆண்டுகளில் கவர்னர் ஒருவர் பதவி விலக நேர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ள ஸ்பிட்சர் தனக்கு அடுத்தபடியாக துணை கவர்னர் டேவிட் பேட்டர்சன் புதிய கவர்னராக பதவியேற்பார் என்றும் கூறியிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பிட்சர், தம்மிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு தான் நடந்து கொள்ள இயலாமல் போனதற்காக வருந்துவதாக கூறினார். அப்போது அவரது மனைவி உடனிருந்தார்.
அமெரிக்க அதிபராக வரக்கூடிய தகுதி பெற்றவராக கருதப்பட்ட ஸ்பிட்சர் மிஸ்டர் கிளீன் என்று வர்ணிக்கப்பட்டவர். ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், தன் மீதான புகாரைத் தொடர்ந்து அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க் ஓட்டல் ஒன்றில் தன் பெயரில் அறை ஒன்றை எடுத்து அங்கு விலைமாது ஒருவரை ஸ்பிட்சர் அழைத்துச் சென்றது ஓட்டல் வீடியோவில் பதிவானதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.