அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டனின் உதவியாளர் ராஜினாமா செய்துள்ளார்.
.
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு முன்பு போட்டிட்ட ஜெரால்டின் பெராரோ என்ற அந்த உதவியாளர் ஹிலாரியை எதிர்த்துப் போட்டியிடும் பாரக் ஒபாமா குறித்து இனவெறியுடன் கருத்து கூறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் பதவிவிலகியுள்ளார்.
சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த பெராரோ, பாரக் ஒபாமா மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்திருக்கமுடியாது என்று கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஒபாமா, இதற்காக ஹிலாரி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ஹிலாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள பெராரோ, இந்தப் பிரச்சனை காரணமாக ஹிலாரியின் நிதிக்குழுவில் தம்மால் தொடர்ந்து நீடிக்க இயலாது என்று கூறியுள்ளார்.
இனவெறியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எந்தக் கருத்தும் கூறவில்லை என்றும் பெராரோ தெரிவித்துள்ளார்.