இராக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் கடத்தப்பட்டிருந்த கல்தேயன் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் மோசுல் நகரில் ஆழமில்லாத புதைகுழி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
65 வயதுடைய பேராயர் பாலோஸ் ஃபரஜ் ரஹோவின் மரணம் தன்னை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக ரோமில் போப்பாண்டவர் பெனடிக்ட் கூறினார்.
மனித உயிருக்கு உள்ள மரியாதையைக் குலைக்கும் மனிதத் தன்மையற்ற வன்செயல் இது என்று போப்பாண்டவர் கூறினார்.
பேராயர் மரணத்துக்கான காரணம் என்ன என்று இதுவரையில் தெளிவாகவில்லை. பேராயர் கடத்தப்பட்டிருந்தபோது அவரின் உதவியாளர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் படையெடுக்கப்பட்டதிலிருந்து கிளர்ச்சியாளர்கள் தம்மை இலக்குவைத்துத் தாக்குவதாக இராக்கின் கிருத்துவர்கள் கூறுகின்றனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியும் இருக்கிறார்கள்