பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைமையில் அமையவுள்ள கூட்டணி ஆட்சியில், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளை, அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி கோரி வருகிறது.
பாகிஸ்தானின் புதிய பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், வரும் 17-ம் தேதியன்று கூட்டணி ஆட்சித் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதையொட்டி அதிகாரப் பகிர்வு குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் உள்துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை ஆகிய சக்தி வாய்ந்த அமைச்சகங்களை நவாஸ் கட்சி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நவாஸ் கட்சித் தலைவர்களில், அதன் மூத்தத் தலைவர் சவுத்தரி நிசார் அலி கான் முக்கிய இடம் வகிப்பதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.